×

கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 380 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வரும் 19ம் தேதி பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

 

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களுக்கு, தனியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஆன்லைன் வழி தேர்வு நடந்தது. அதில், 8,096 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,536 பேர் தேர்வாகி, அடுத்த கட்ட தேர்வு எழுதினர் அவர்களில், 964 பேர் தேர்வாகி, வகுப்பறை செயல்பாடுகளை நேரில் விளக்கினர். இந்த மூன்று கட்ட தெரிவு முறையில், அதிக மதிப்பெண் பெற்ற, 255 ஆசிரியைகள் உட்பட, 380 பேர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. தேர்வானவர்களில், 162 பேர் இடைநிலை, 177 பேர் பட்டதாரி, 41 பேர் முதுநிலை ஆசிரியர்கள் ஆவர். டாப் மதிப்பெண் பெற்ற 55 பேர், வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இந்நிலையில், கனவு ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 19ம் தேதி நாமக்கலில் இந்த விழா நடைபெற உள்ளது. இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். எனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை 18ம் தேதி அலுவலகப் பணியாக கருதி விடுவிக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

The post கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 380 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வரும் 19ம் தேதி பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu School Education Department ,Dinakaran ,
× RELATED பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்